நவம்பர் 25 ம் நாள். 1949ஆம் ஆண்டு.. இந்தியாவின் அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிவதற்கு முதல் நாள். அண்ணல் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை இது..
”நமது பழைய எதிரிகளான சாதி, மதம் ஆகியவை நம்முடன் இன்றளவும் நீடிக்கும் நிலையில் நாம் ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறோம். பல்வேறு மாறுபட்ட சித்தாந்தங்களை கொண்ட அரசியல் கட்சிகளையும் கூட நாம் தற்போது பெற்றிருக்கிறோம். இத்தருணத்தில் நான் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியர்களாகிய நாம் நமது தேசத்தின் மாண்புகளை மதங்களுக்கு மேலானதாக வைப்பதற்கு பதிலாக, மதங்களை தேசத்தின் மாண்புகளுக்கு மேலானதாக முன்வைக்க முற்பட்டால், நாம் மீண்டும் ஒரு ஆபத்தான காலகட்டத்திற்குள் நுழைவோம் என்பதோடு மீட்சியடையவே முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டு விடுவோம்.” மேலும் அரசியல் நிர்ணய சபையில் தன்னோடு பணியாற்றிய சக உறுப்பினர்களோடு அண்ணல் பகிர்ந்து கொள்கிறார்.
“உலகத்தின் வேறெந்த தேசத்தையும் விட இந்தியாவிற்கு இக்கூற்று பெரிதும் பொருந்தும் என்றே கருதுகிறேன். நமது தேசத்திற்கான கொள்கைகளை வடிவமைக்கும் போது, அதீத பக்தி மற்றும் தனிமனித வழிபாடு ஆகிய அம்சங்களுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த பாத்திரம் இருந்ததை நாம் ஏற்கனவே உணர்ந்திருந்தோம். மதம் அல்லது ஆன்மீக வழியிலான பக்தி ஒருவேளை ஆன்மாவின் சரணாகதிக்கு உதவும் என நம்பலாம். ஆனால் அரசியலில் அதீத பக்தியோ அல்லது தனிமனித வழிபாடோ, அது நிச்சயம் பெரும் சீரழிவிற்கும், இறுதியான சர்வாதிகாரத்திற்குமே இட்டுச் செல்லும்”.
இன்றளவும் மிகவும் பொருத்தப்பாடுடைய எச்சரிக்கையாகவே இவை விளங்குகின்றன. “இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக இந்தியா விளங்கும்” எனும் முகவுரையை தாங்கி நிற்கும் நமது அரசியல் சாசனத்தை தகர்ப்பதற்கான முயற்சிகள் வலுவடைந்து வருகிறது. கரையான்களை போல ஒரு சிலரால் அரிக்கப்படுவதற்கான வெறும் புத்தகம் அல்ல அது. இந்த தேசத்தின் மொத்த குடிமக்களுக்கும் முதலாவதும், மிக முக்கியமானதுமான சமூதாய ஒப்பந்த ஆவணமாகும். அரசியல் சாசனத்தையும், அதன் மேன்மைகளையும் பாதுகாக்க ஒன்றிணைந்து சபதமேற்போம் என இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து முன் வைத்துள்ள வேண்டுகோள் அனைத்து மக்களின் உறுதிமொழியாக இவ்விடுதலை திருநாளில் பரிணமிக்கட்டும்.